Sunday, August 14, 2011


மாறாத உண்மைகள்!

கடலும் - கண்மூடித்
தூங்கு வதில்லை;
காற்றும் - மௌனித்து
நிற்பதில்லை!

போற்றும் உடலும்
இறக்காமல் இருப்பதில்லை;
காக்கும் உயிரும்
பறக்காமல் வாழ்வதில்லை!


தேனும் மலரில்
நிலைப்பதில்லை;
தேடிய செல்வமும்
நிரந்தர மில்லை!

தேக சுகமும்
தொடர்ந்து வருவதில்லை;
தேவைகள் ஒரு போதும்
குறைந்து போவதுமில்லை!

நன்றி கொன்ற நாயை
கண்டதில்லை;
நன்றியுள்ளவரைக் -
காண்பதின்று சுலபமில்லை!

அகிம்சை வாழ - இங்கு
காந்தி மனமில்லை;
சனங்களின் மனங்களில்
சாந்தியைக் காணவில்லை!

உண்மையை உணர்ந்தவன் -
உலக - மாயையை நம்புவதில்லை;
தன்னையே உணராது
வாழ்பவர் மனிதரில்லை!














Sunday, August 7, 2011

எங்களைத் தெரியுமா?


பண்டைக் கால
பாரம்பரியங்கள்
இன்றுவரை....
இறந்து போகாமல்
காத்து வருகிறோம்;


நீதி வழுவா மன்னவர்,
நிழலும் புகழும்
செங்கோல் அறவும்
செழித்தே விளங்க
எங்கள் குலமும்
உழைத்தே வந்தது!


அரியணை மேலே,
அருகே...
அழகாய் நின்று
அரச பரம்பரையின்
அந்தஸ்தினையும்
உயர்த்தி நிறுத்தியவர்
எங்கள் இனத்தவரே!


வெண்மையாய் மட்டும்
வீற்றிருந்தோம் அன்று!
இன்றோ....


நிற வேறுபாடுகளும்
இனப்பாகு பாடுகளும்
எங்களிலும்
நிறையவே உண்டு!





ஆண் - பெண்
பால் வேறுபாடுகளும் - எங்களை
பல கூறுகள் போடுவதுண்டு!


பலரும்
பல் விழுந்தோரும் - எங்களை
இனங்கண்டு
பாதுகாப்பதுமுண்டு!


அரச குலம் -
மறைந்து போனதால்...
இறந்து போனது;
எங்கள் குலப் பெருமைகள்!


அதனால்....
நாய் பேய்களுக் கெல்லாம்
நாங்களின்று -
நல்ல - அடிமைகளானோம்!


நகரும் போது....
மண் பார்த்து நடந்தாலும்
தூங்கும் போது,
தலைகீழாய்
தொங்கியே ஆகுவோம்!


பொழியும் மழையும்
எங்கள் முதுகில்தான்;
சுட்டெரிக்கும்
சூரியனும்
பட்டுத் தெறிப்பது
எங்கள் மேனியல்தான்!


மரம் ஒன்றே யொன்று;
இலையும் ஒன்றேதான்;
என்றாலும்....
கிளைகளோ 
எட்டுத் திக்கும்
எட்டி நிற்கும்!'


விடுகதை யிது;
விடுவித்தால்....
விடை....
குடையென விரியும்!


                  














Tuesday, August 2, 2011

மேடு பள்ளம்!


அழுக்கேறிய -
கந்தலுடையில்...
கண்பார்வை குறைந்த
மந்த கதியில்
தட்டுத் தடுமாறும் உருவம்!


கையிலே....
ஊன்றுகோல்!
பையிலே....
பழைய பேப்பர்!
தொய்விலே....
தொடரும் துயரங்கள்!


உயர்சாதி வீட்டில்
ஒருகாலம் வாழ்ந்தவர்தான்!

நீந்தி விளையாட -
வீட்டுக் குள்ளேயே
வரவழைத்தவர்தான்!


நீடூழி வாழ -
சத்துணவுண்டு....
நோய்த் - தடுப்பூசிகளும்
போட்டதுண்டு!


நினைத்தபடி யெல்லாம்
வாழ்க்கைப் பாதையிலே
நடக்கப் பழகி....
விதிக்கு எதிராய்
விளையாடியதால்....
வழுக்கி விழுந்தவர்தான்!
வந்து கிடக்கிறார்;
வீதியோரம்!


வாங்கி வந்த இளமை;
வந்து சேர்ந்த பணம்;
வழியிலே....   
வடிந்து செல்ல......
உறவுகளும் -
உதிர்ந்து போக....


மனம் கசந்த -
மனித உருவத்துள்ளே
முதுமை முகாமிட்டு
நோய் நொடிகளை
குடியிருத்தியது!


கடைசியில்....
சாலையோரம் -
சவத்தைக் கிடத்திவிட்டு
எஞ்சியிருந்த உயிரும்
ஏமாற்றி விட்டது!


முகவரி கண்டு -
வாரிசுகள் ஓடோடி வந்து...
சங்கையாய்
அழைத்துச் சென்றார்;
சடலத்தை!


          ***