Saturday, October 6, 2012

பிள்ளை நேயக்கல்வி போதிக்கவந்த நீலப்படம்!

 
                         அண்மையில் பொத்துவில் கல்விவலய பாடசாலை ஒன்றில் பிள்ளைநேயக்கல்வி சம்மந்தமான கருத்தரங்கு ஒன்று ஆரம்பப் பிரிவிலிருந்து கல்விகற்ற அதிகாரி ஒருவரினால் நடாத்தப்பட்டதாம்.

இதன்போது பிள்ளைநேயக்கல்வி பற்றிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட்டதாம். 
 
திரையைப் பார்த்துக்கொண்டிருந்த  பெற்றோரும் மாணவர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டு அருவருப்போடும் வியப்புடனும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்களாம். 
 
நடந்தது என்ன?

பென் ட்ரைவ்(Pen Drive) மாறிவிட்டதால் அங்கே தென்பட்டது...........  நீலப்படமாம்!!


Tuesday, October 2, 2012

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் "திவிநெகும" திட்டம் கிழக்கு மாகாண சபையில் நிறைவேறியது!!!


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக அரசாங்கத்தின் பிரதானமான நிகழ்ச்சித்திட்டமான "திவிநெகும" நிகழ்ச்சித்திட்டம் இன்று கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதற்கு ஆதரவாக வாக்களித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் எதிராக வாக்களித்தன.

திவிநெகும் சட்ட மூலத்தை ஒன்பது மாகாண சபைகளின் அங்கீகாரத்தின் பின்னரே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் பணித்ததற்கு அமைவாகவே அரசாங்கத்தினால் ஒவ்வொரு மாகாண சபைகளிலும் சமர்பிக்கப்படுகிறது.

வடமாகாண சபை இயங்காத இத்தருணத்தில் எப்படி இது சாத்தியப்படும் என சமுர்த்தி அதிகாரசபையின் ஊடகப் பிரிவு அதிகாரியான சேனக உபேசிங்க என அவர்களிடம் வினவியபோது.......

"இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில சட்டமூலங்கள் மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பப்பட்ட சமயங்களில் வட மாகாண ஆளுநரே அங்கீகாரம் வழங்கினார்" என அவ்வதிகாரி குறிப்பிட்டார். 

"மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அபிவிருத்தி தொடர்பான அதிகாரங்களை மாகாணசபையிலிருந்து முற்றாக மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து, இந்த அபிவிருத்தி தொடர்பான முழுப்பொறுப்பையும் வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உண்டு என்ற திட்டமே இந்த திவிநெகும சட்டமுலமாகும்" என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறைத்தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹஸனலி தெரிவித்திருந்தார்.


எனினும் இச்சட்டமுலம் தொடர்பில் கலந்தாலோசிக்க காலஅவகாசம் தேவை என கோரிக்கை விடுக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹஸனலி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Monday, October 1, 2012

அரை நூற்றாண்டுக்கு பின் அவதாரம் எடுத்த கட்டடம்!


                              ஐம்பது வருடங்களுக்குப்பின் பொத்துவில் பிரதேச சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று (2012-09-29 சனிக்கிழமை) நடைபெற்றது. 

                          பொத்துவில் பிரதேச சபைக்கு சொந்தமான பொத்துவில் பிரதான வீதியில்  (MOH அலுவலகத்திற்கு அருகாமையில்) அமைந்துள்ள  குறித்த  வளவிற்குள் இந்த 3 மாடி கட்டடம் 2 கோடி ரூபா செலவில் அமையப்படவிருக்கிறது. 

                  இவ்வைபவம், பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் கௌரவ அப்துல் வாஸீத் அவர்களின் தலைமையின் கீழ் அமைச்சர் அதாஉல்லா அவர்களும் கிழக்குமாகாணசபை அமைச்சர் உதுமாலெப்பை அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

                இந்நிகழ்வின்போது நடைபெற்றுமுடிந்த தரம் 5ற்கான புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் 2ம் இடம்பெற்றுக்கொண்ட  தாறுல் பலாஹ் பாடசாலை மாணவிக்கு அமைச்சர் அதாஉல்லாஹ்வினால் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

பொல்லடி கொண்டு வரவேற்கப்படும் போது 

பேண்ட் வாத்திய முழக்கங்களுடன்


தேசியக்கொடி ஏற்றும்போது

தவிசாளர் அடிக்கல் நாட்டும்போது



"எப்படியான சந்தோஸங்கள் வந்தாலும்
கல்வியின் வெற்றியில் கிடைக்கும்
சந்தோஸமோ தனிச்சுகம்தான்"


புலமைப்பரிசில் பரீட்சையில்
அம்பாறை மாவட்டத்தில் 2ஆம் இடம் பெற்ற
 மாணவிக்கு பொற்கிழி வழங்கும்போது

Monday, August 20, 2012

தொலைத்தொடர்பு கோபுரத்தால் வரவிருக்கும் 'மகா துயரம்'


அனைருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 
ஈகைத்திருநாள் வாழ்த்துக்கள்.

          இலங்கையில் தற்போது தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவரும் பிரபல்யமான தனியார் நிறுவனம் ஒன்று பொத்துவிலில் தனது தொலைத்தொடர்பு சேவையை விரிவாக்கும் முகமாக மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பொத்துவிலின் நடுப்பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தை நிறுவுவதற்கான அத்திவாரம் இட்டு படுவேகமாக வேலைகளை நிகழ்த்தும் இத்தருணத்தில்....

என்னதான் நடந்தாலும் தனக்கு வருமானம் வந்தால் போதும் என்று என்னும் குறித்த நிறுவனமும்....

பல திறந்த வெளிகள்  இருந்தும் கூட மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடத்தில் கோபுரத்தை கட்டுவதற்கு அனுமதி அளித்த மக்கள் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்ட பொத்துவில் பிரதேச சபைத்தலைவரும்......

இதை கொஞ்சம் பாருங்களேன்..
 
"மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்"
 
உங்களுடைய வீடு அல்லது வேலை பார்க்கும் இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மொபைல் போன் சிக்னல்களை வாங்கி அனுப்பும் டவர்கள் இருக்கின்றனவா? இது மைக்ரோவேவ் அடுப்பின் உள்ளே 24 மணி நேரம் இருப்பதற்கு சமம் என்று மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் கிரிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்ற 2010 டிசம்பரில் இவர் இந்த ஆய்வு முடிவினை மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ஓர் அறிக்கையில் அளித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் பல துறைகளுக்கான அமைச்சரவை இணைந்து மொபைல் போன் டவரின் மின் காந்த அலைக்கதிர் வெளிப்பாட்டினைக் 450 mw/sq m  என்ற அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தன. ஆனால் இன்றுவரை இது அமல்படுத்தப்படவில்லை என பேரா. குமார் தெரிவித்துள்ளார்.

இது சார்ந்து மேற்கொண்ட இன்னொரு ஆய்வில் இந்த கோபுரங்கள் அருகே வசிப்பவர்களில் ஒரு சிலருக்கு மூளையில் கேன்சர் நோய் வரும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் மிக அருகே வசிப்பவர்களுக்கு தூக்கமின்மை தலைவலி மயக்கம் மூட்டுவலி போன்றவையும் வரலாம். தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மூளையில் கட்டி போன்றவை வர வாய்ப்புள்ளதாக புது டில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் அறுவை மருத்துவர் டாக்டர் சமீர் கௌல் தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்பு மென்மையான தலை ஓட்டினைக் கொண்டுள்ள சிறுவர்களிடம் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் மொபைல் போன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுக்கான அமைப்பு இதனை மறுத்துள்ளது. அரசு வரையறுக்கப்பட்ட நிலையில் கதிர்வீச்சுடன்தான் தற்போது மொபைல் போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே பாதிப்பு வர வாய்ப்பில்லை என்று அந்த அமைப்பின் முதன்மை இயக்குநர் மாத்யூஸ் விளக்கம் அளித்துள்ளார்.

கோபுரங்கள் பாதுகாப்பாகத்தான் இயங்குகின்றன என்றால் ஏன் அது குறித்து இத்தனை சட்டங்களும் ஆய்வுகளும் இருக்கின்றன என்று பொது நல அமைப்பாளர்கள் கேட்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கோபுரங்கள் உள்ள இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லத் தொடங்கி உள்ளனர்.

நன்றி  www.senthilvayal.wordpress.com

மேலதிக தகவலுக்கு 

Saturday, August 4, 2012

பொத்துவில் பிரதேசசபைத் தலைவர் "வாஸித்" அவர்களே! இதை வாசித்தறிவீர்களா!!

                                
                    பொத்துவில் நகரின் அனைத்து பிரதான மற்றும் உள் வீதிகளில் மும்மொழிகளிலும் வீதிப் பெயர்ப்பலகைகள் நடப்பட்டுள்ளன. 'கிக்கோலா' நிறுவனத்தின் அனுசரனையுடன் பொத்துவில் பிரதேச சபையும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. மிகவும் பாராட்டப்படக்கூடிய விடயம். முதற்கண், பொத்துவில் பொதுமக்கள் சார்பாக பிரதேச சபைக்கும் குறித்த அனுசரனையாளருக்கும் மனமுவந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

     என்னதான் அத்தி பூப்பதுபோல் புதுப்புது எண்ணங்கள் எமது பிரதேசசபைக்கு தோன்றினாலும் அது அரைகுறையாக காட்சி தருவதுதான் அருவெறுப்பாய் இருக்கிறது.

                 சில வீதிகளின் பெயர்கள், தமிழில் எழுதியிருக்கும் விதம் என்ன என்று விளங்கவேயில்லை..... 
எழுத்துப்பிழை ஒரு பக்கம்! 
வீதிகளின் பெயர்கள் பெயர்ப்பலகையின் இடமாற்றத்தால் தடுமாற்றம்.....
இது எழுத்துப்பிழையா... இல்லை இதுதானா, இந்த வீதியின் பெயர் என்ற குழப்பம் மறுபக்கம்!!

               பொத்துவிலின் ஹிதாயாபுரம் நகரில் "அல்-முனௌவரா பள்ளிவாயல் வீதி" என்று எழுத வேண்டிய பெயர்ப்பலகையில் அல்-முனௌவறரா என்று "ற" வை இழுத்துக் கொண்டிருக்கிறது பொத்துவில் பிரதேச சபை. இதில் வேடிக்கை என்னவென்றால், உண்மையாகவே இப்பெயர்ப்பலகை பொத்துவிலின் கொடிமரத்தடி அருகில் உள்ள பள்ளிவாயல் வீதியாக குறிப்பிட வேண்டியது ஏறத்தாள ஒரு கிலோமீற்றர் பின்னோக்கி வந்து அல்-முனீரா மஸ்ஜித் வீதியில் வைக்கப்பட்டதுதான். மேலும் அதே 'வட்டை'யில்தான் பொத்துவில் பிரதேச சபைத்தலைவர் "வாஸித்" வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடிமரத்தடியில் பல்வேறு இடமாற்றங்களுக்குப்பின் எழுத்துப்பிழைகளுடன் வந்துசேர்ந்த பெயர்ப்பலகை






             எனினும், பெயர்ப்பலகையின் இடமாற்றநிலை கண்டு குறித்த வீதிகளில் வசிப்போர் பெயர்ப்பலகை நாட்டியோரிடம் சொன்னதால் இன்று(2012-08-04) பொருத்தமான இடங்களில் பெயர்ப்பலகை இடப்பட்டது.

மேலும்......
பொத்துவிலின் பிரதான வீதியோடு தொடர்புபடும் இன்னொரு வீதியின் பெயர்ப்பலகையின்  கொடுமையை என்னவென்று சொல்ல....
"நாவலடி வீதி" என்று இடவேண்டிய இடத்தில் "நாவையடி வீதி"  என்று இட்டிருப்பதுதான் அடுத்த கொடுமை......
தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தில் தமிழுக்கு நேர்ந்த கதியென்னவோ....




                   இதில் "வாத்தியார் வீதி"யென்றும் ஒரு வீதி உள்ளது. எந்த வாத்தியார் என்றுதான்.... தெரியவில்லை!

              இப்படியான.. பெயர்ப்பலகையின் மொழிப்பிரச்சனைகள் நாடு பூராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவை வேற்று மொழி பெரும்பான்மையோர் வாழும் பகுதிகளிலே காணப்படுவது வழமை. அது தொடர்பில் வாய்கிழிய பேசும் நாம், நம் பிரதேசத்தில் நம்மாளே அதே பிரச்சனையை உண்டாக்குவதுதான் வேடிக்கையானது.

இந்த வீதிகள் தொடர்பான செய்திகள் தொடரும்.........


Tuesday, July 31, 2012

இடுகைகளுக்கான உங்களது கருத்துக்கள் எங்கள் வளர்ச்சிக்கு தீனிபோடும்....
உங்களது கருத்துக்களை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்பதை  மறவாதீர்கள்!

     எங்கள் தலைவர்கள்?       

                                                         

                                                        பேரினவாதக் கட்சிகளின்
                                                        பிடியிலிருந்து பிரிந்து வந்து
                                                        தனிக்கட்சி அமைத்தீர்கள்!

                                                        இனத்தின் அபிலாஷைகளை
                                                        வென்றெடுக்க வந்த -
                                                        போராளிகள் என்றீர்கள்!

                                                        இனத்தை அடகு வைத்து
                                                        அரச ஆசனங்களை அடைந்து
                                                        உங்கள் சுகத்தைக் காத்தீர்கள்!

                                                        அறிக்கைகளால் 
                                                        தலைமைக் கதிரைகளை
                                                        அலங்காரம் செய்தீர்கள்!

                                                        மறைந்த தலைவரின்
                                                        திருநாமத்தை -
                                                        தாரக மந்திரமாய் ஓதி....
                                                        மக்களை மயக்கினீர்கள்!


                                                        ஒற்றுமை ஒன்றையே
                                                        நித்தமும் செப்பிய நீங்கள்....
                                                        வேற்றுமைகளையே
                                                        அறுவடை செய்தீர்கள்!

                                                       'தனித்துவக் கட்சி' என்றீர்கள்
                                                       'இறை வேதமே  -
                                                        எங்கள் யாப்பு' என்றீர்கள்!
                                                        இன்றோ....
                                                        ஆளுக்கொரு கட்சியில்
                                                        தனித் தனியே நிற்கிறீர்கள்!!

                                                        வாக்குப் போட்டோம்;
                                                        உங்கள் வாக்குகளை நம்பி!
                                                        வந்து விட்டீர்கள்;
                                                        ஊருக்கொரு எம்.பி!

                                                        வென்று விட்டீர்களா?
                                                        எங்கள் அபிலாஷைகளை!!
 
                                                       'அரசியல் முகவரி' இல்லாது
                                                        அவதிப்பட்ட நமது இனம்,
                                                        நிழல் பெற நாட்டினீர்கள்;
                                                        சின்னமாய் ஓர் ஆலமரம்!

                                                        வளம் தந்த மரத்தை
                                                        பிளந்தீர்கள்; நாலைந்தாய்!
                                                        அடிமரம் ஆருக்கென்று
                                                        அடிபிடிப்பட்டீர்கள்!

                                                        இன்று நீங்கள் 
                                                        அரச மரநிழலிலே
                                                        அமைச்சராய்  நிற்கிறீர்கள்!
                                                        ஆளும் வர்க்கத்தோடு
                                                        அண்டி இருந்து கொண்டு -
                                                       'வண்டி' வளர்க்கின்றீர்கள்!!


                                                       'அதிகாரப் பகிர்வு'
                                                        என்ற போதெல்லாம்
                                                        போராடி நின்றவரிடம்
                                                        சரிபாதி கேட்டு
                                                        சண்டித்தனம் காட்டினீர்கள்!

                                                       "தமிழ்மொழி நமக்கும்
                                                        தாய்மொழி" என்றீர்கள்;
                                                        தாயின் உரிமைக்காய்
                                                        சேய்கள் நீங்கள்
                                                        செய்தவை என்ன?

                                                        சிங்கத்தின் வாலாய் நின்று
                                                        வடக்கையும் கிழக்கையும்
                                                        வெட்டிப் பிளக்க
                                                        வாளேந்தி வந்தீர்கள்!

                                                         இத்தனையும் போதாதென்று
                                                         பேரினவாதத் தலைவர்களின்
                                                         தேர்தல் குதிரைகளிலே
                                                         தெருத் தெருவாய் யெங்கும்
                                                         சவாரி வருகிறீர்கள்!

                                                         கடந்த காலங்களில்
                                                         நடந்தவை யெல்லாம்
                                                         பொய் என்பீர்கள்!

                                                         எதிர்கால வாக்குறுதிகளில்
                                                         நம்பிக்கை வையுங்கள்;
                                                         என்று இனிக்கப் பேசுவீர்கள்!

                                                         ஏமாற்றங்களைச் சுமந்து
                                                         உதிர்ந்து போன இலைகள் நாங்கள்;
                                                         காய்ந்து சருகாகி
                                                         மனங் கசந்து போய்
                                                         நிற்கிறோம்; போங்கள்!!
 
     
                                                  * * *
 

     

Sunday, July 22, 2012

நிறைவாழ்வு தரும் புனித ரமழானே!


நன்மையே நல்கிடும் சுரங்கமாக
நரகினையே மூடிடும் பெருங்கதவாக;
உண்மையே உணர்த்திடும் நன்மதியாக
உலகில் உதித்திடுவாயே புனித ரமழானே!

குறையேயிலா மறைதந்த மாதமாக - மன
கறை நீக்கியே இறையருள் துலக்கவே
நிறைவாழ்வு தந்து நிம்மதி நிலை கொள்ளவே
நிலவுலகிலே நீ வருவாய் எமது மனம் மகிழவே!

நமையாண்ட புலன்களைளெல்லாம் - நன்றே
நாமாள நோன்பினை நன்கொடையாய் தந்தே
தீமைகள் எரித்து மேலும் நன்மைகள் பெருகவே
தீஞ்சுவை யமுதாய் தோன்றிடுவாயே ரமழானே!

இச்சைகளுக்கு இறுக்கமாக - இரும்பு விலங்கிட்டே
இருகண்ணும் காதும் கரங்களும் - நமது நாவுமே
நிச்சயமாகவே இறையாணை என்றும் பேணவே
நற்செய்திகள் கூறியே ஆண்டுதோறும் வருவாயே!

இரக்க மற்ற அரக்க மனம் கொண்டு வாழ்வோருக்கும்
ஈகையின் மேன்மையினை எடுத்தியம்பியே - நாளும்
கரைந்திடும் காலத்தின் நிலையாமை - அவர் அறிந்திடவே
கரையிலா நெடுவானில் சென்றே மறைந்திடுவாயே!

                               * * *

Saturday, July 21, 2012

பாவக்கறை போக்கும் குர்ஆன் மாதமே.............!


                                                      மாதங்களில் மகத்துவம்
                                                      சொரிய வந்த ரமழானே!

                                                      பூத்திருக்கிறது, முகங்களில்
                                                      மகிழ்ச்சிப் பூக்கள்;
                                                      காத்திருந்தோம்,
                                                      உனது வருகைக்காக!

                                                      இம்மை  - மறுமை
                                                      ஈருலக வாழ்வுக்கும்
                                                      நேர்வழி காட்டும்
                                                      திருமறை ஈன்ற
                                                      அமுத சுரபியே!


                                                        நோன்பு எனும்
                                                        இன்பச் சிறையிருந்து
                                                        இறையருள் இரந்து
                                                        மாண்புடனே யாவரும்
                                                        மண்ணில் வாழ்ந்திடவே.....

                                                        மன இச்சைகளுக்கு
                                                        இறுக்கமாய் விலங்கிட்டு
                                                        பக்குவமாய் செயற்படவும்
                                                        பயிற்ச்சி யளிக்கும்
                                                        பணியாளனே,
                                                        புனித ரமழானே

                                                        கண்ணும் காதும் நாவும்
                                                        கடமையாய் எந்நாளும்
                                                        இறையாணை பேணவும்
                                                        துணையாய் நீ,
                                                        வருவாயே ரமழானே!


                                                          வல்ல இறையோனின்
                                                          திருப்தி ஒன்றையே
                                                          உள்ளம் கொண்டு
                                                          நோன்பிருந்தோரை....
                                                          உவப்போடு ஏற்று
                                                          வரவேற்கும் 'றையான்'
                                                          சொர்க்க வாயலின்
                                                          திறவுகோலாக வரும்
                                                          தீனின் மாதமே!

                                                          வெள்ளமாய் பெருகிவரும்
                                                          நன்மை யெல்லாம்
                                                          அள்ளிவரும் ரமழானே,

                                                           உளச் சுத்தியோடும்
                                                           பய பக்தியோடும்
                                                           எதிர்பார்த்து நின்றோம்;
                                                           இனிய ரமழானே!

                                                                  
                                                                        ***

Tuesday, July 10, 2012


வெந்நீராய் வடியும் மக்கள் கண்ணீர்!

           கடந்த 06ம் திகதி பொத்துவில் பிரதேசத்தில் உள்ள உலகப்பிரசித்திபெற்ற அருகம்குடாவில் மீன்கள் இறந்து கரையொதிங்கியது கண்டு மக்கள் பெரிதும் ஆச்சரியப்பட்டனர். நிலைமை பற்றி கேள்வியுற்றோர் மீன் வலையுடனும் பல பேர் 'பேக்' குடனும் படையெடுத்தனர். இந்நிலைக்கு என்ன காரணம் என விசாரித்ததில் "வினை விதைத்தவன் வினையறுப்பான்" என்ற பழமொழிக்கிணங்க பதில் கிடைத்தது.

படுவேகத்தில் மீன் பிடிக்கவந்த
'வெள்ளோட்ட மீனவர்கள்'


கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக சில விவசாயிகளின் காணிகள் நீரில் முழ்கியது. இதனால் குறித்த விவசாயிகள் அருகம்குடா நீரை கடல் நோக்கி வெட்டிவிட்டனர். இதனால் குடா நீர் குன்றி விவசாயிகள் நன்மை பெற்றனர். (இப்போது தண்ணீரே இல்லாமல் விவசாயம் வாடி நிற்பதை மனதிற்கொள்க) பிறகுஇ ஏறத்தாள இரு மாதங்களாக மழைபொழியவில்லை. இதனால் அருகம்குடா நீரின் உப்புத்தன்மை சற்று கூடுதல் நிலையிலிருந்தது.
இரு மாதங்களுக்கு பின் பொழிந்த மழைஇ அருகம்குடா நீரில் ஒருவிதமான உப்புமாறுதல் நிலையை ஏற்படுத்தியதால் குடா நீரில் வாழும் உயிரினங்களுக்கு இந்நிலை பொருத்தமற்றதாக இருந்ததாலும் குடாவில் இருந்த உயிரினங்கள் இறக்கவேண்டிய நிலையேற்பட்டது.

ஒதுங்கிய மீன்களின் அணிவரிசை

செத்தமீன்களும் சாகத்துடிக்கும் மீன்களும் பொதுமக்களின் அடுப்பங்கரை சட்டிகளுக்கு இலவசமாக அழகுசேர்த்தது.

பின்,இரு நாட்களுக்குப்பின் கரையொதிங்கிய மீன்களின் துர்நாற்றம் காரணமாக பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியினால் சுத்தம் செய்யப்பட்டது.

"ஒரு பக்கம் சோறு (நெல்)
 மறுபக்கம் கறி (மீன்) 
அழியும் நிலை; 
இறைவன் விதியின் வலிமை"


Friday, June 29, 2012


அடிப்படைத் தேவைக்குள் அடிபுடி!


அம்பாறை மாவட்டம் பொத்துவில் நகரில் விவசாயிகள் தற்போது தண்ணீரில்லாப் பிரச்சனைக்கு பெரிதும் ஆளாகியுள்ளனர். வழமைக்கு மாறாக இந்நிலை ஏற்படக்காரணம் என்ன!! என எமது குழாம் தேடியறிந்து பெற்ற முக்கியமான தகவல்களை உங்களிடம் பகிர்வதில் பெருமிதம் கொள்கிறது.

கண்டத்திலுமா.........(பொத்துவிலில் பிரசித்திபெற்ற காணிப்பிரதேசம் இது) தண்ணியில்ல!!!
பொக்குவாய்க் கிழவர்களின் பெருமூச்சு!

'படித்தவர்கள்' பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேச்சு!!!

முஸ்லிம்களின் நீதியமைச்சு............. என்ன ஆச்சு!!!!!


பெரும்பாலும் விவசாயமே வாழ்வாதாரத் தொழிலாக மேற்கொள்ளப்படும் பொத்துவில் நகரில் ஒவ்வொரு வருடமும் ஏறத்தாள 16 000 ஏக்கர் நெற்செய்கைக் காணிகள் இருக்கின்றன.இதில் குறிப்பாக பெரும்போகத்திற்கு 12 000 ஏக்கர் நிலப்பரப்பிலும் சிறுபோகத்திற்கு 6 000 ஏக்கர் நிலப்பரப்பிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.. ஒவ்வொரு வருடமும் கோடை, மாரி என மாறி மாறி வருவதுண்டு. நீர்ப்பிரச்சனை ஏற்பட்டால் அது விரைவில் தீர்க்கப்படும். பிரச்சனையாகக் கொள்ளப்படுவதில்லை. என்றாலும் இம்முறையோ நெற்செய்கைக்காக பயன்படும் ஆறுகளில் கை கழுவுவதற்குக்கூட தண்ணீரில்லாப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வயலுக்கு நீர்பாய்ச்ச தண்ணீர்ப் பம்புகள் வாடகைக்கு எடுக்க நேரம் போதாததால் 100க்கும் அதிகமான நீருந்தும் பம்ப்கள் விற்றுத்தீர்ந்துவிட்டன.

நாவலாறு, இரத்தல்குளம், ரொட்டைக்குளம், செம்மணிக்குளம், செங்காமம் குளம் என பல்வேறு நீர் நிலைகளிலிருந்து நீர் பெறப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக பொத்துவிலின் மேற்குப்பகுதியிலிருந்து வரும் "ஹெட் ஓயாவி"ன் வடிச்சல் ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிந்து நாவலாறு வழியாக ஒரு கிளையும் ஜமாந்துறை கண்டம் வழியாக ஒரு கிளையும் வருகைதந்து பெரும்பாலான பொத்துவில் வயலுக்கு நீர் கிடைக்க வழிசெய்கின்றன.

அது சரி......
இப்படியெல்லாம் நீர் நிரம்பி வழியும்போது ஏன் இந்தப் பஞ்சநிலை என எண்ணத்தோனுகிறதா......


நாவலாற்றின் தற்போதைய நிலை

சரி என்னுடன் நீங்கள் கடந்த 4 வருடங்கள் பின்னோக்கி வாருங்கள். சரி இப்போ நாம் 2007ஜுன் மாதத்தில் இருக்கிறோம். சரியா.............

சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொத்துவில் நகரில் மீள்கட்டுமானம் என்ற பெயரில் பல்வேறு அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றன. அதில் ஒரு சேவையாக அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனத்தின் ஏறத்தாள 2,000 மில்லியன் நிதிஉதவியுடன் 40,000 குடும்பங்கள் பயன்பெறுமளவிற்கு பொத்துவிலின் உல்லை பகுதியில் நீர்த்தாங்கி நிறுவப்பட்டு மக்களுக்கு தேவையான குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க வழிசெய்யப்பட்டது. ("அந்தளவுக்கு" குடிநீர்ப் பிரச்சனையில்லாத பொத்துவிலூருக்கு இது தேவைதானா.......)

பொத்துவில் - உல்லை பகுதியில்
அமையப் பெற்றிருக்கும் தண்ணீர்த்
தாங்கி

இவ் நீர்த்தாங்கிக்கு தேவையான நீர் நாவலாற்றிலிருந்தே எடுக்கப்பட்டுவந்தது. அங்குதான் தோண்டப்பட்டது இப்போதைய தண்ணீர்ப்பிரச்சனைக்கான அத்திவாரம்.

தேவையான நீர் நாவலாற்றில் நிலத்திற்கு கீழிருந்து எடுக்கப்பட்டது. நீரை எடுக்க எடுக்க நிலத்தடி நீர் குறைந்து நிலத்திட்கு மேல் உள்ள நீர் நிலத்திற்கு கீழ் சென்றது. சென்ற நீர் குழாய் மூலம் தண்ணீர்த்தாங்கிக்கு நிரப்பப்பட்டது. ஆறும் வற்றிவிட்டது. கூடவே கோடையும் வந்ததால் வயலும் காய்ந்துவிட்டது. இப்போது புரிகிறதா... எங்கு பிரச்சனை என்று.

தண்ணீர்ப் பஞ்சத்தால் கருகும் தன்
வேளாண்மையை எண்ணி வருந்தும் விவசாயி

மேலும் உகந்தை, கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் இந்த நாவலாற்றில் தங்கி; உணவருந்தி தேவையான தண்ணீரையும் பெற்றுக்கொண்டு செல்வர். அதற்கும் இப்போது முடியாத நிலையாகிவிட்டது

''வேரை அறுத்துவிட்டு ஏன் "பூ" பூக்கவில்லை என்று கேட்டால் யான் என்ன செய்ய.....''

அது சரி நீங்கள் சினிமாப்படம் பார்ப்பதுண்டா..........

கொஞ்சம் இந்தப் படத்தை 'திரும்பியும்' பாருங்கோ...... இதே பிரச்சனை ஏற்பட்டு இந்திய கிராமமொன்றுக்கு ஏற்பட்ட பஞ்ச நிலைமையை...

நடிகர் சரத்குமாரும் நடிகை நயன்தாராவும் வடிவேலுவும் சேர்ந்து நடித்த 'தலைமகன்' என்ற திரைப்படம்தான்.

சரி நடந்தது நடந்துவிட்டது என்னதான் நங்க செய்யனும் என்னு கேக்குறீங்களா...

தீர்ப்ப நாங்க சொல்லுறம் கேளுங்கோ..

இப்படி........ ''இனிமேலும் வரும்! நீங்களும் இப்படித்தான் கேட்பீங்க... நாங்களும் இதுபோல தான் எழுதுவம்''
இதுவே சிறந்த தீர்ப்பு.


என்றாலும்......

இவ் நீர்வழங்கும் திட்டத்தை கொண்டுவந்த குறித்த அரச சார்பற்ற நிறுவனமும் அதற்கு அனுமதி வழங்கிய அரச அதிகாரிகளும் பொத்துவில் மக்களின் இந்நிலையறிந்து உதவிக்கரம் நீட்டுவீர்கள் என நம்புகிறோம்.

மேலதிக தகவல்களுக்கு
http://srilanka.usaid.gov/programme_tr_description.php?prog_id=4



Wednesday, May 30, 2012


என்றும் பிள்ளையாக....?


பால்ய வயதில்
பால் மாவினைத் -
திருடித் தின்றேன்;

இன்று....
மனையாளின்
மனையிலும்....
அதே கதைதான்!

           *
அன்னை - அன்று
என்னை ஆண்டாள்;
என்னை இன்று....
இல்லத்தரசி ஆள்கிறாள்!

          *
அவதரித்த இல்லத்திலே
அன்று நான்....
அடிமட்ட உறுப்பினன்;

இல்லாளின் ஆட்சியிலே
இன்றும் நான்....
மாணவன்!


       














இலவசச் சீருடை
இல்லாக் காலத்தே.... என்
வெள்ளாடை விருப்பத்தை
வென்றேன் - அன்று....
கண்ணீர் யுத்தத்திலே!

வந்து சேர்ந்த
வாழ்க்கையின்
வறுமைப் பாதையிலே....
'பசுமைப் புரட்சி'
செய்கிறேன் - இன்று....
பருத்தியாடை கட்ட!

       *
பள்ளிப் பருவத்திலே
துள்ளித் திரிந்த - என்
துடுக்கடக்க.... அன்று
பள்ளியாசானின்
பிரம்பு வந்தது!

இன்று....
துள்ளியெழும்
என் ஆசைகளுக்கு
கொள்ளி வைக்க
பள்ளியறைப் பங்காளியின்
பகிடிவதை வந்தது!

         ***




Sunday, May 27, 2012


மலட்டு மலர்கள்!


இயற்கையின் சிரிப்பை;
மலர்களில் பார்த்தோம்!

மண்ணின் மதிப்பை
ஏன் மறந்தோம்?

சிந்தனையை
அடகு வைத்து
சிறு சாடிகளில்
போலிப் பூக்களின்
செயற்கைச் சிரிப்பை
ரசித்தோம்!

செயற்கையோ
இயற்கையோ....
தடவிப் பார்த்தால்
பேதம் புரியவில்லை!

மேனியோ மென்மை
வாடாத தன்மை
வடிவும் உண்மை
வர்ணமும் பன்மை!

முத்த மிட்டால்....
வாச மில்லை;
மகரந்தப் பொடியும்
பூச வில்லை;

ஆலயம் செல்லும்
அந்தஸ்தும் - அந்தப்
பூவைக்கு இல்லை!

இல்ல மெல்லாம்
இடம் பிடித்தாலும்....
மானிட மனத்தை -
மயக்கி யாண்டாலும்....
மங்கையர் கூந்தலில்
தவ மிருந்தாலும்....

எப்போதுமே
சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பூமகளை....
எந்தத் தேனீக்களும்
தேடி வருவதில்லையே!

        ****
       

Tuesday, May 8, 2012


விலை போகுமோ வாலிபம்?


கோழை யென்றாய்
கொள்கை யற்ற -
ஆண்மை யென்றாய்!

கல்யாணச் சந்தையிலே
விலை போகும் - நவயுக
காளை யென்றாய்;

ஏழை நான்....
என் செய்வேன்!

பெட்டியிலே.... பணம்
இருந்தால்தானே....

அட்டியலாய் - உன்
சங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!

பத்துப் பவுணில்
பத்தரை மாற்றுத் தங்கத்தில்
பாவையுன் - காறை
எலும்பு மறைந்திடவே

போடவில்லை....
நகை யென்றால்....
பொறுத்திடுவாயோ - இந்த
பொல்லாத உலகத்திலே!

அடங்காத - உன்
ஆசைத் தீக்கு -
பல மடங்காய்
தீனி போடத்தானே....
கேட்கிறோம் - சீதனமே!