Wednesday, May 30, 2012


என்றும் பிள்ளையாக....?


பால்ய வயதில்
பால் மாவினைத் -
திருடித் தின்றேன்;

இன்று....
மனையாளின்
மனையிலும்....
அதே கதைதான்!

           *
அன்னை - அன்று
என்னை ஆண்டாள்;
என்னை இன்று....
இல்லத்தரசி ஆள்கிறாள்!

          *
அவதரித்த இல்லத்திலே
அன்று நான்....
அடிமட்ட உறுப்பினன்;

இல்லாளின் ஆட்சியிலே
இன்றும் நான்....
மாணவன்!


       














இலவசச் சீருடை
இல்லாக் காலத்தே.... என்
வெள்ளாடை விருப்பத்தை
வென்றேன் - அன்று....
கண்ணீர் யுத்தத்திலே!

வந்து சேர்ந்த
வாழ்க்கையின்
வறுமைப் பாதையிலே....
'பசுமைப் புரட்சி'
செய்கிறேன் - இன்று....
பருத்தியாடை கட்ட!

       *
பள்ளிப் பருவத்திலே
துள்ளித் திரிந்த - என்
துடுக்கடக்க.... அன்று
பள்ளியாசானின்
பிரம்பு வந்தது!

இன்று....
துள்ளியெழும்
என் ஆசைகளுக்கு
கொள்ளி வைக்க
பள்ளியறைப் பங்காளியின்
பகிடிவதை வந்தது!

         ***




Sunday, May 27, 2012


மலட்டு மலர்கள்!


இயற்கையின் சிரிப்பை;
மலர்களில் பார்த்தோம்!

மண்ணின் மதிப்பை
ஏன் மறந்தோம்?

சிந்தனையை
அடகு வைத்து
சிறு சாடிகளில்
போலிப் பூக்களின்
செயற்கைச் சிரிப்பை
ரசித்தோம்!

செயற்கையோ
இயற்கையோ....
தடவிப் பார்த்தால்
பேதம் புரியவில்லை!

மேனியோ மென்மை
வாடாத தன்மை
வடிவும் உண்மை
வர்ணமும் பன்மை!

முத்த மிட்டால்....
வாச மில்லை;
மகரந்தப் பொடியும்
பூச வில்லை;

ஆலயம் செல்லும்
அந்தஸ்தும் - அந்தப்
பூவைக்கு இல்லை!

இல்ல மெல்லாம்
இடம் பிடித்தாலும்....
மானிட மனத்தை -
மயக்கி யாண்டாலும்....
மங்கையர் கூந்தலில்
தவ மிருந்தாலும்....

எப்போதுமே
சிரித்துக் கொண்டிருக்கும்
இந்தப் பூமகளை....
எந்தத் தேனீக்களும்
தேடி வருவதில்லையே!

        ****
       

Tuesday, May 8, 2012


விலை போகுமோ வாலிபம்?


கோழை யென்றாய்
கொள்கை யற்ற -
ஆண்மை யென்றாய்!

கல்யாணச் சந்தையிலே
விலை போகும் - நவயுக
காளை யென்றாய்;

ஏழை நான்....
என் செய்வேன்!

பெட்டியிலே.... பணம்
இருந்தால்தானே....

அட்டியலாய் - உன்
சங்குக் கழுத்தில் -
கட்டி விடலாம்....
பொற்றாலியை!

பத்துப் பவுணில்
பத்தரை மாற்றுத் தங்கத்தில்
பாவையுன் - காறை
எலும்பு மறைந்திடவே

போடவில்லை....
நகை யென்றால்....
பொறுத்திடுவாயோ - இந்த
பொல்லாத உலகத்திலே!

அடங்காத - உன்
ஆசைத் தீக்கு -
பல மடங்காய்
தீனி போடத்தானே....
கேட்கிறோம் - சீதனமே!

Sunday, May 6, 2012


கற்பிழந்த கவிதை மகள்!

உன் தனிமையை
இனிமையாக்க
கனிமொழியாய்
காதலியாய் - உன்
காலடி தேடிவந்தேன்!

எழுதுகோ லெனும்
தூரிகையால்....
காரிகை - என்
மேனியெங்கும்
சில்மிஷங்கள் செய்தாய்!

உன் கவித்துவம்
ஊரெல்லாம் மணக்க
தெருவெல்லாம் என்னைஇ
தேரேற்றி விட்டாயே!

வீரமே யில்லா
உன் நெஞ்சிலே - அது
உள்ளதாகவே சொல்ல
என் சொற்களுக்கு
தைரியம் பூசினாய்!

தகுதியே இல்லா
அரசியல் தலைவர்க்கு
போலிப் புகழ் பாடி....
வால்பிடிக்க வசதியாய்
பொய்மைகளால் எனை
புனைந்தாயே!

உன் கருத்தை
நீயே கற்பழித்து விட்டாய்;

காலமெல்லாம்
கற்புடனே வாழ்ந்த
என் வாழ்வினிலே....
களங்கத்தை கற்பித்தாயே!

கண்கெட்ட சமூதாயத்தின்
கருத்தினைத் திருத்திட - நீ
திடங்கொண்ட தெல்லாம்
தடம்புரண்டு போனதே!
 
உன் கருவையெல்லாம்
என்னுள்ளே....
புதைத்து வைத்தது....
உண்மையில்லையா....
வெறுங் கற்பனைதானா?

நேசத்தைப் பொழிந்த
உன் எண்ணங்களுக்கு
என் பாசத்தின் பரிணாமம்
புரிய வில்லையே!

பணத்திற்கு ஆசைப்பட்டு -
கவிமகள் எனை....
சினிமாப் பாட்டாய்
சிங்காரம் செய்து
ஆடவிட்டாயே -
துகில் உரித்து!